சங்கரன்கோவில், செப். 5: சங்கரன்கோவில் அருகே தாறுமாறாக ஓடிய கார், சாலையோர புளியமரத்தில் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காந்தி நகர் 4ம் தெருவைச் சேர்ந்த துரையின் மகன் பவுல் (23). இவரும், அதே தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (25), 2வது தெருவைச் சேர்ந்த முத்துக்குமாரின் மகன் சதீஷ் (20), காயிதே மில்லத் 1ம் தெருவைச் சேர்ந்த ஷேக் பரீத்தின் மகன் முகமது ஷெரீப் (19), நெல்லை அடுத்த பாலாமடையை சேர்ந்த கணபதியின் மகனும், சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவருமான முத்துமாலை (30) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் குற்றாலத்திற்கு காரில் சுற்றுலா சென்றனர். அங்குள்ள அருவிகளில் நீராடிய பிறகு சென்று விட்டு அதே காரில் நேற்று அதிகாலை சங்கரன்கோவிலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை பவுல் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை வடக்குப்புதூர் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாடின்றி தாறுமாறாக ஓடிய கார், அங்கு சாலையோரம் இருந்து புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த பவுல், சதீஷ், முகமது ஷெரீப், கார்த்திக் ஆகிய நான்கு பேருக்கும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த போலீஸ்காரர் முத்துமாலை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


