அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோயிலில் ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றம்: அன்புகொடிமக்கள் திரளாக பங்கேற்பு
அம்பை,செப்.5: அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி மன் நாராயணசாமி கோயிலில் நடந்த ஆவணி பெருந்திருவிழா கொடியேற்றத்தில் அன்பு கொடிமக்கள் திரளாகப் பங்கேற்றனர். அம்பை அருகே வாகைக்குளம் வாகைபதி மன் நாராயணசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி பெருந்திருவிழா 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு அன்னதர்மம், வாகன பவனி நடைபெறும். காலை மற்றும் இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டர் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன்,
நாகம், பூம்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனங்களில் பவனி வருதல் நடைபெறும். 8ம் திருநாளான்று அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 10ம் திருநாளான்று காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 11ம் திருநாளான செப்.14ம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியை தொடர்ந்து கொடியிறக்குதலும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி நிர்வாகிகள் மற்றும் அன்புகொடிமக்கள் செய்து வருகின்றனர்.


