Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த ஆண்டை விட ஆலங்குளம் பகுதியில் சோளம் விளைச்சல் அமோகம்

ஆலங்குளம், ஆக.3: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்தது. இதனால் காய்கறி பயிரிட்டால் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என ஏராளமான விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். குறிப்பாக ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களான குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஆ.மருதப்பபுரம், கீழப்பட்டமுடையார்புரம், நெட்டூர், சிவலார்குளம், கிடாரக்குளம், ரெட்டியார்பட்டி உட்பட ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது சோளம் விளைந்து அறுவடை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 100 கிலோ எடையுள்ள மூடை ஒன்று ரூ.3000க்கு விற்பனை ஆனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டை விட விலை அதிகரிப்பால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விளைச்சல் குறித்து நெட்டூரைச் சேர்ந்த விவசாயி சவுரிராஜ் கூறுகையில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 கிலோ விதை வாங்கி நாற்று விதைக்கணும். பின்னர் 30 நாள் கழித்து அதனை ஒரு ஏக்கர் நிலத்தை உழவு அடித்து, பாத்தி கட்டி நடவு செய்ய வேண்டும். அதற்கு ரூ.16 ஆயிரம் வரை செலவு ஆகிறது. நடுவை நட்டபின் அறுவடை செய்ய 110 நாட்கள் வரை ஆகிறது. ஒரு ஏக்களுக்கு 10 முதல் 12 மூடை வரை விளைகின்றது. கடந்த ஆண்டு ரூ.3000 வரை விற்பனையான சோளம் இந்த ஆண்டு ரூ.5000 வரைவிற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.35 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது என மகிழ்ச்சி பொங்க பேசினார். இதுபோன்ற சோளம் பயிரிட்ட அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.