Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வி.கே.புரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க கூண்டு வைப்பு

விகேபுரம்,ஜூலை 1: விகேபுரம் பகுதியில் அட்டகாசம் செய்யும் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் விகேபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கரடிகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடிகள் மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் நடமாடி வருகிறது. பகல் நேரங்களில் புதர்களில் பதுங்கியிருக்கும் கரடிகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்ந்து வருகிறது. குறிப்பாக அனவன்குடியிருப்பு, திருப்பதியாபுரம், பசுக்கிடைவிளை, கோட்டைவிளைப்பட்டி, சங்கரபாண்டியபுரம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடி நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த 26ம் தேதி இரவு ஜமீன்சிங்கம்பட்டி உச்சிமேடு பகுதியில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் புகுந்த கரடி, அங்கு ஏற்றப்பட்டிருந்த விளக்குகளை சேதப்படுத்தி, விளக்குகளில் இருந்த எண்ணெயை குடித்து விட்டு சென்றது. மேலும் கோயில் வளாகத்தில் இருந்த பூஜை பொருட்களை சேதமாக்கியதுடன், பீரோவை தள்ளி விட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வரவே கரடி அங்கிருந்து சென்று விட்டது. பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும், இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கரடியை விரட்ட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஸ்ரீகாந்த் அறிவுறுத்தலின் பேரில் கடையம் வனசரகர் கருணாமூர்த்தி தலைமையிலான வனத்துறையினர் நேற்று தெற்கு அகஸ்தியர்புரத்திலுள்ள சிவகுருநாதன் என்பவரது தோட்டத்தில் கரடியை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.