Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முதல்வரை சந்திக்க விடாமல் தடுத்த போலீசார்

திருச்சி, நவ.3: திருச்சி செம்பட்டு பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளாக 150க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த தோல் தொழிற்சாலைகள், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டன.

இந்நிலையில், தொழிலாளர்கள் குடியிருக்கும் ஒட்டுமொத்த இடத்தையும் சிலர் சமீபத்தில் தங்களது பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருப்பதாகக் கூறி, \\”உடனடியாக இடத்தை காலி செய்ய வேண்டும்’ என அப்பகுதி பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது,

இந்நிலையில், நேற்று காலை தமிழக முதலமைச்சர் விஜய், புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டைக்கு புறப்பட்டார். முதலமைச்சரிடம் தங்களின் வாழ்வாதார போராட்டத்தை நேரில் முறையிட நினைத்த செம்பட்டு பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர், திரண்டு வந்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர். முதல்வர் வந்தபோது சிறுவர்கள் மாமா எங்க ஊரை இடிக்கிறார்கள்.. காப்பாற்றுங்கள்.... என கோஷமிட்டனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் முதல்வர் வாகனம் சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரின் பாதுகாப்பையும் மீறி, முதலமைச்சர் விஜய்யின் வாகனத்தை நோக்கி முன்னேறி மறிக்க முயன்றுள்ளனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போலீசார் பொதுமக்களை பிடித்துத் தள்ளி, முதலமைச்சரின் வாகனம் தடையின்றி செல்ல வழிவகை செய்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மரியம் பிச்சை மற்றும் ரோஸ் என்ற இரண்டு பெண்மணிகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பரிசோதனை அலுவலர்கள் அவர்களுக்கு முதல் உதவி அளித்தனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்; நாங்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்கள், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

தற்போது திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி நிர்வாகம் இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி, போலி பட்டாக்களை காட்டி எங்களை மிரட்டி வருகிறது. எங்களை வீடற்றவர்களாக மாற்றத் துடிக்கிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் எங்கள் வாழ்வாதார கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரில் சமர்ப்பிக்கவே நாங்கள் வந்தோம். ஆனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எங்களை பிடித்துத் தள்ளி, முதலமைச்சரை சந்திக்க விடாமல் தடுத்துவிட்டனர் என பொதுமக்கள் கண்ணீருடன் கூறினர். தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் 150 குடும்பங்களின் நிலத்தை மீட்கவும், கல்லூரி நிர்வாகத்தின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை காக்கவும் தமிழக முதலமைச்சர் விஜய் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த செம்பட்டு பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.