Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆட்டம் பாட்டத்துடன் களைகட்டியது காவிரி பாலம் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் கோலாகலம்

திருச்சி, செப்.17: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி, கொள்ளிடம் மற்றும் அந்தந்த பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 1,175 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் 3 நாட்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சிலைகளுக்கு தனித்தனி வழித்தடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதன்படி, மண்ணச்சநல்லூர், லால்குடி பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் நம்பர் ஒன் டோல்கேட், திருவானைக்காவல், மாம்பழச்சாலை வழியாக காவிரி ஆற்றின் இடதுபுறம் கொண்டு செல்லப்பட்டன.

திருவெறும்பூர், திண்டுக்கல், வயலூர், குழுமணி உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் இருந்து வரும் சிலைகள் அந்தந்த வழித்தடங்கள் வழியாக அண்ணாசிலை, காவிரி பாலம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பகுதிகள் மற்றும் ஊர்வலப் பாதைகளில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி மற்றும் எஸ் பி மேற்பார்வையில 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஊர்வலப் பாதைகளில் போலீசார் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டிருந்தது. ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி மாநகரில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (செப்.17) காலை 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிலை ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. சரக்கு வாகனங்களும் குறிப்பிட்ட மாற்றுப்பாதைகளில் இயக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ஊர்வலம் நடைபெறும் நாளில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல, போலீசார் அறிவுறுத்தி போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர். அதன்படி நேற்று விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கும் விசர்ஜனம் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஆட்டம் பாட்டத்துடன் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகளில் கரைத்தனர். ஏராளமான சிலைகள் ஊர்வலமாக வந்ததால் காவிரிபாலம் களைகட்டியது. சிலைகள் கரைப்பை காண ஏராளமான பொதுமக்கள் காவிரி பாலத்தில் திரண்டதால் பிரம்மாண்ட திருவிழாபோல் காட்சியளித்தது.