திருச்செந்தூர், செப். 30: முருகன் கோயில் உதவி ஆணையர் லோகநாதனிடம் தமிழ்நாடு நுகர்வோர் பேரவை நிறுவனத் தலைவர் மோகனசுந்தரம் கொடுத்துள்ள மனு: திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமான வெற்றி விநாயகர் கோயில் கடற்கரையில் சந்தோஷ மண்டபம் அருகில் உள்ளது. இந்த கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதை சரி செய்து சுற்றுச்சுவர் எழுப்பி அதனருகில் உள்ள தீர்த்த கிணற்றை தூர்வாரி சுத்தம் செய்து அதன் மேல் மூடி போட வேண்டும்.
மேலும் ஓதுவார்கள் மூலம் நித்திய பூஜை செய்ய வேண்டும். அதேபோல மூவர் சமாது மடப்பள்ளி சிதிலமடைந்து மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகும் நிலையில் உள்ளதால் அதனையும் புதுப்பிக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மன் வழங்கிய ஆலயமணி உச்சிக்கால பூஜையின் போது அடித்திட ஆவண செய்ய வேண்டும்.
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஏற்கனவே கடை வைத்திருந்த 84 வணிகர்களுக்கு வாடகை அடிப்படையில் கடைகள் வழங்க வேண்டும். கந்தசஷ்டி மண்டபம் தற்போது தகரக் கொட்டகையில் உள்ளது. அதனை கல் மண்டபமாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். அப்போது பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கவுரவ ஆலோசகர் நெல்லையம்மாள், ஓய்வுபெற்ற அஞ்சல் அலுவலர் கருப்பன் உடனிருந்தனர்.


