Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி, ஏப். 30: தூத்துக்குடியில் வரும் 4ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் சிசிடிவி காமிராக்கள் பொறுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடக்கிறது. 6 தொகுதிகளுக்கும் தனித்தனியாக 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணிக்காக 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜைகளில் 12 நுண் பார்வையாளர்கள் என மொத்தம் 420 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தபால் வாக்குகளை எண்ணும் பணிக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில் 18 அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 24 பேர், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் 24 பேர், நுண் பார்வையாளர்கள் 24 பேர், உதவியாளர்கள் 24 பேர் என மொத்தம் 114 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், உதவியாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பயிற்சி வகுப்புக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷூ மகாஜன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றை கையாள தெரிந்திருக்க வேண்டும். 17சி படிவம் பூர்த்தி செய்வது குறித்து நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். வாக்காளர் ஒப்புகை சீட்டு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் கட்டுபாட்டு கருவியில் பதிவாகி உள்ள வாக்குகள் சமமாக இருக்க வேண்டும். இதனை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். வாக்கு எண்ணும் நாளில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்பட வேண்டும். அதன்பிறகு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும். தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் முன்கூட்டியே வாக்கு எண்ணும் மையத்துக்கு வருகை தந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டன. முன்னதாக வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, தேர்தல் அலுவலர் விஷூ மகாஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷீலா, தாசில்தார் தில்லைபாண்டி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.