குளத்தூர், செப். 25: குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம் பகுதியில் சுனாமி காலனி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இங்குள்ள மீனவ மக்கள், பள்ளி மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் தூத்துக்குடி, விளாத்திகுளம், குளத்தூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல காலனி முகப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பராமரிப்பின்றி பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணியர் நிழற்குடையின் மேற்கூரை கான்கிரீட் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளது. சிதிலமடைந்து எப்போது இடிந்து விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் பஸ்சில் வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், ஆபத்தான பயணிகள் நிழற்குடையை தவிர்த்து வெயிலில் நின்று காத்திருந்து பஸ் ஏறிச் சென்று வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள், சிதிலமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மீனவ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


