குளத்தூர், செப். 23: குளத்தூர் அருகே பாம்பு கடித்து பெண் உயிரிழந்தார். குளத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மனைவி லெக்கம்மாள்(28). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு லெக்கம்மாளை கடித்துள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த லெக்கம்மாள், பூச்சி ஊர்வதுபோல் இருந்ததால் தூக்க கலக்கத்திலேயே தட்டிவிட்டு மீண்டும் தூங்கியுள்ளார்.
பின்னர் காலையில் லெக்கம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கபட்டுள்ளது. அவரது உறவினர்கள் குறுக்குச்சாலை தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு லெக்கம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள குளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


