தூத்துக்குடி, ஆக. 21: தூத்துக்குடியில் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 1வது தெருவில் பெருமாள் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்து அர்ச்சகர் வழக்கம்போல் பூட்டிச் சென்றார். நேற்று காலை அர்ச்சகர் கோயிலை திறக்க வரும்போது வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்து கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. சுமார் ரூ.20 ஆயிரம் வரை திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முகமூடி அணிந்த 2 பேர் உண்டியலில் இருந்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து முகமூடி அணிந்த மர்மநபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.




