திருச்செந்தூர், ஆக. 20: திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை எஸ்பி சிவபிரசாத் திறந்து வைத்தார். திருச்செந்தூர் நகரில் தூத்துக்குடி கோர் டெக்னோ சொல்யூஷன் சார்பில் முக்கிய இடங்களான பேருந்து நிலையம், காமராஜர் சாலை, ரத வீதிகள், கோயில் வாசல் செல்லும் வழிகள், பயணியர் விடுதி சாலை உள்ளிட்ட இடங்களில் முதற்கட்டமாக 110 காமிராக்கள் பொருத்தப்பட்டு கோயில் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் ஒரே இடத்தில் இருந்து கண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள போலீசாருடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத், நேற்று மாலை திறந்து வைத்து கண்காணிப்பு பணியை பார்வையிட்டார்.
நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆர்டிஓ கவுதம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள் கோயில் அம்பேத்கர், தாலுகா முருகன், போக்குவரத்து எஸ்ஐக்கள் வேல்முருகன், சதீஷ், திருச்செந்தூர் நகர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




