கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு குறுக்குப் பாலம் பகுதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை சீரமைத்து தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகரக் குழு சார்பில் ரயில்வே அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவில் கூறியிருப்பதாவது:
கோவில்பட்டி பகுதியில் ரயில்வே பாதையை கடந்து பொதுமக்கள் செல்வதற்கு நடைபாதை உள்ளது. சுமார் 50 படிகள் கொண்ட இந்த நடைபாதையை இப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டோர் இந்த பாதையை பயன்படுத்துகின்றனர். தற்போது நடைபாதை சேதமடைந்து, பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இதனால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த நடைபாதையை உடனடியாக சீரமைத்து பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூ. மாவட்ட உதவி செயலாளர் பாபு, நகர நிர்வாகக்குழு உறுப்பினர் முனியசாமி, துணைச் செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், பொருளாளர் சீனிவாசன், நகரக்குழு உறுப்பினர்கள் செல்லையா, அருண், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், ரங்கநாதன், ஏஐடியூசி முருகேசன், தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



