Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பள்ளிகளில் தோட்டம் அமைக்க சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி

கோவில்பட்டி, ஆக. 19: கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆரோக்கியமான சத்தான உணவு வழங்கும் வகையில், சத்துணவு அமைப்பாளர்களுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவில்பட்டி வட்டாரத்தில் 2025-26ம் நிதியாண்டில் 25 பள்ளிகளிலும், 2026-27ம் நிதியாண்டில் 24 பள்ளிகளிலும் என மொத்தம் 49 பள்ளிகளில் முதற்கட்டமாக பள்ளித் தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக காய்கறி விதைகள், செடி வளர்ப்பு பைகள், தென்னை நார் கழிவு கட்டிகள், தண்ணீர் தெளிக்கும் பூவாளிகள், தெளிப்பான்கள், பழச்செடிகள், மண்புழு உரம் மற்றும் உயிர் உரம் உள்ளிட்ட பொருட்கள் கடந்த வாரம் 49 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டன.

இந்த பொருட்களை பயன்படுத்தும் முறைகள், செடிகளை வளர்க்கும் விதம் மற்றும் பள்ளிகளில் தோட்டம் அமைப்பது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர், சத்துணவு அமைப்பாளர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தார். இதைத்தொடர்ந்து அந்தந்த பள்ளி மாணவ- மாணவியரின் பசுமைப்படை, என்எஸ்எஸ், என்சிசி குழுக்கள் மூலம் பள்ளி வளாகங்களில் தோட்டம் அமைத்து காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதன் மூலம் மாணவர்களுக்கு பள்ளிப் பருவத்திலேயே தோட்டக்கலையின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும். மேலும், பள்ளித் தோட்டங்களில் விளையும் சத்தான காய்கறிகளை மதிய உணவில் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் ஊட்டச்சத்து மேம்படும் என தோட்டக்கலை உதவி இயக்குநர் மலர் தெரிவித்தார்.