செய்துங்கநல்லூர், ஆக. 14: தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வசவப்பபுரம் கால்வாய், நாட்டார் குளம், செய்துங்கநல்லூர், தூதுக்குழி குளம், வெள்ளூர்குளம், வெள்ளமடம் தென்கரைகுளம், முதலைமொழி குளம் மற்றும் கீழப்புதுக்குளம் கிராமத்தில் உள்ள குளம் ஆகியவற்றை கலெக்டர் விஷூ மகாஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்துங்கநல்லூர், கால்வாய் கிராமம் மற்றும் வெள்ளமடம் கிராமங்கள் வழியாகச் செல்லும் மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய் மற்றும் சுப்பராயபுரம் அணை பகுதியை ஆய்வு செய்த கலெக்டர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோயில் அருகே ரூ.14 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நீர்வளத்துறை அதிகாரிகளிடம் நீர்நிலைகளை பராமரித்தல் மற்றும் பாசன வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் கோரம்பள்ளம் ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் தங்கராஜன், நெல்லை திட்டங்கள் மற்றும் வடிவமைப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜனகரஞ்சினி, உதவி பொறியாளர்கள் அஜ்மீர்கான், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



