தூத்துக்குடி, ஆக. 14: தூத்துக்குடி மாவட்டத்தில் 900க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. மாநகர் பகுதிகளில் மட்டும் 95 கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரேஷன் கடைகளில் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் சர்வர் குழப்பத்தால் கைரேகை வைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. பல கடைகளில் இன்டர்நெட் சேவை பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை.
இதனால் பொருட்கள் வாங்க வருகை தரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். வெகுநேரம் காத்திருக்கும் பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் நிலையும் உள்ளது. பணிகளுக்கு செல்லும் நுகர்வோர் வெகுநேரம் காத்திருக்க முடியாத நிலையில் சிரமப்படுகின்றனர்.இந்த இன்டர்நெட் சேவை குறைபாட்டை சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



