தூத்துக்குடி, ஆக. 13: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை பூங்காவில் உள்ள கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள் புதுப்பித்து, மின் விளக்குகள் அமைத்துக் கொடுக்கப்படும் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்து நகர் கடற்கரை பூங்காவில் உள்ள கூடைப்பந்து மற்றும் கைப்பந்து மைதானத்தை சீரமைத்து மின் விளக்குகள் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி, இப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்களிடம் பூங்கா நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அவர்களிடம் கைப்பந்து மைதானத்தில் 15 மின் விளக்குகள் அமைத்து கொடுக்கப்படும். கூடைப்பந்து மைதானம் புதுப்பித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் இணைப்பு பெட்டிகள், சுவிட்ச் போர்டுகள் ஆகியவை மாற்றி கொடுக்கப்படும். பகல் நேரத்திலும் முத்துநகர் கடற்கரை பூங்காவை பயன்படுத்தும் வகையில் வேம்பு, புங்கை என 200 மரங்கள் வளர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அப்போது மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சண்முகபுரம் பகுதி திமுக செயலாளர் சுரேஷ்குமார், திமுக நிர்வாகி முரளிதரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் ஞானமார்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




