செய்துங்கநல்லூர், ஆக.7: முறப்பநாடு கோவில்பத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் சண்முகையா எம்எல்ஏ பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அரசு வழங்கும் சேவைகள் எளிமையாக கிடைத்திடும் வகையில், அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நேற்று கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முறப்பநாடு கோவில்பத்து, முறப்பநாடு புதுகிராமம், கீழப்புத்தனேரி, வசவப்பரம் உள்ளிட்ட கிராமங்களுக்கான சிறப்பு முகாம் கோவில்பத்து கிராமத்தில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.
முகாமில் ஊழியர்கள், அதிகாரிகள் பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதும் அதை எங்கு சென்று கொடுக்க வேண்டும் என்று வழிமுறைகளோடு பொதுமக்களுக்கு அதிகாரிகள் உடனிருந்து செயல்பட்டனர். முகாமில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை 4 ஊராட்சி நிர்வாகமும் இணைந்து செய்திருந்தனர். முகாமில் மகளிர் உரிமை தொகைக்காக 436 மனுக்கள் உட்பட மொத்தம் 1356 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. முகாமில் வைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கர், கருங்குளம் யூனியன் தனி அலுவலரும் பீடிஓவுமான ஆறுமுகநயினார், கருங்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமசாமி, துணைச் செயலாளர்கள் பக்கபட்டி சுரேஷ், வீரபாகு, ஊராட்சி செயலர்கள் சோமு, பாலாஜி, முத்து மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


