தூத்துக்குடி, ஆக. 5: தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்காக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் மற்றும் அதன் அருகிலுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது மொத்தமுள்ள 60 வார்டுகளில் 41 வார்டுகளில் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வரும் 15ம் தேதி சுதந்திர தினம் முதல் 60 வார்டுகளிலும் தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். தற்போது 10 வார்டுகளில் சோதனை முறையில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. விரைவில் அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் நடைபெறும். பருவமழை முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மழைக்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பக்கிள் ஓடை சுமார் 7 கிமீ தொலைவுக்கு விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. மேலும் நகரில் 375க்கும் மேற்பட்ட வடிகால்கள் அனைத்தும் பருவமழைக்கு முன்பாக முழுமையாகத் தூர்வாரப்படும், என்றார். ஆய்வின்போது மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், பகுதி செயலாளர்கள் சண்முகபுரம் சுரேஷ்குமார், அண்ணாநகர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் கனகராஜ், முத்துவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


