குளத்தூர், அக். 2: தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1971-76ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள், வருடந்தோறும் அக்.1ம் தேதி பள்ளி வளாகத்தில் ஒன்று கூடி தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். இதேபோல் நேற்றும் மாணவர்களின் 50ம் ஆண்டு சந்திப்பு, பள்ளி வளாகத்தில் நடந்தது. தருவைகுளம் பாரத் மீன் கம்பெனி உரிமையாளர் மனோகரன் தலைமை வகித்து பேசினார்.
முன்னாள் மாணவர்கள் கனிஷ்கர், ஹனீபா, சந்திரமோகன், ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழைய மாணவியர் தெரஸ்செல்வி, பிலோமினாள் வரவேற்று பேசினர். ஜூலியட் செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அன்பு, காந்திமதி, ஜெயக்கொடி, மிக்கேலம்மாள், தங்கபாப்பா, மணி ஆகியோர் தங்களது பள்ளி நினைவுகள் குறித்து கவிதை வாசித்தனர்.
தொடர்ந்து தங்களது குடும்ப உறவுகளை சக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து கொண்டனர். காலை துவங்கிய சந்திப்பு மதிய உணவு, தேனீர் என கலகலப்பாக உரையாடி தங்களது நினைவாக அன்பு பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். மனோரஞ்சிதம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் மற்றும் பாரத் மீன் கம்பெனி உரிமையாளர் மனோகரன் செய்திருந்தார்.


