ஸ்ரீவைகுண்டம், அக். 2: ஆழ்வார்திருநகரி அருகே தாமிரபரணி ஆற்றில் கரை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை சரவணன் எம்எல்ஏ பார்வையிட்டார். கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டு ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் தாலுகா பகுதிகளில் பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக ஸ்ரீவை. அடுத்த சிவராமமங்கலம், அப்பன்கோவில் பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட கரைகளை நீர்வளத்துறை மூலமாக தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிவராமமங்கலம், அப்பன்கோவில் ஆற்றங்கரை பகுதி சீரமைப்பு பணியில் விரிசல் விழுந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தகவலறிந்த ஸ்ரீவை. எம்எல்ஏ சரவணன், இப்பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பொதுமக்கள், மழை காலத்திற்கு முன்பாக சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த சரவணன் எம்எல்ஏ, பாசன குளங்களை தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. அந்தப் பணிகளின்போது கிடைக்கும் மணலைக் கொண்டு தாமிரபரணி ஆற்றங்கரைகளை முழுமையாக பலப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


