முடுக்கலான்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டி அருகே நீர்நிலைகள் மற்றும் பொதுப்பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே குருமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஊரணிகள், நீரோடைகள் உள்ளது மட்டுமின்றி புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிகளவில் மூலிகைகளும் உள்ளன. இந்த மலைச்சரிவு பகுதியில் முடுக்கலான்குளம் பகுதி மக்கள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஊராட்சி சார்பில் ஊரணி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில தனி நபர்கள் சட்டவிரோதமாக நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், ஊரணி பொதுப்பாதை, குடிநீர் குழாய் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலம் வனம் நீர்நிலை பாதுகாப்பு குழு மற்றும் முடுக்கலான்குளம் கிராம மக்கள் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பட்டியல் இன மக்களின் நிலங்களை மோசடியாக கிரையம் செய்து நீர்நிலைகள் மற்றும் பொதுப்பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.