தூத்துக்குடி, ஆக. 10: தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி 3ம் மைல் அருகே திருவிக நகர் பகுதியில் ஒரு வீட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் தூத்துக்குடியில் உள்ள கார் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 4 பைக்குகளில் வந்த கும்பல், இவர்களது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசி விட்டு சென்று உள்ளனர். இதில் வீட்டின் கண்ணாடிகள் உடைந்தும், வெளியில் இருந்த துணிகள் தீயில் கருகியும் சேதமடைந்தது. பெட்ரோல் குண்டு வீட்டின் மொட்டை மாடியில் விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் மற்றும் பாதிப்புகள் ஏற்படவில்லை.



