Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தருவைகுளம் அருகே சிதிலமடைந்த ஈசிஆர் சீரமைக்கப்படுமா?

குளத்தூர், நவ. 3:தமிழ்நாட்டின் சுற்றுலா பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி, வேம்பார், குளத்தூர், வேப்பலோடை, தருவைகுளம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளது. சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் இக்கிழக்கு கடற்கரைச்சாலை, எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படும்.

இந்நிலையில் குளத்தூர் பகுதியில் இருந்து தருவைகுளம் வரையிலான சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்திலான சாலை, கடந்தாண்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட சாலையின் பல இடங்களில் மேடு பள்ளமாகவும். சில இடங்களில் விரிசலும் ஏற்பட்டு தரமற்ற சாலையாக காட்சியளிக்கிறது. குறிப்பாக தருவைகுளம் அடுத்த சக்கம்மாள்புரம் விலக்கு பகுதியில் சாலையில் விரிசல் விட்டு பள்ளமாகி அவ்வழியாக வரும் வாகனங்களுக்கு விபத்துகளை ஏற்படுத்தி ஆபத்து விளைவிக்கும் விதமாக காட்சியளிக்கிறது.

மேலும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளைவுகளில் வாகனங்கள் வருவது கூட தெரியாத அளவிற்கு சீமைகருவேல முட்செடிகள் வளர்ந்து கிடக்கின்றன. ராமேஸ்வரம், கன்னியாகுமரி செல்லும் முக்கிய வழித்தடத்தில் சாலை சிதிலமடைந்தும், சாலையோரம் அகற்றப்படாத சீமைக்கருவேல மரங்களால் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு கடற்கரைச்சாலையில் சிதிலமடைந்த இடங்களை துரிதமாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.