Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாதாம், முந்திரி, கருப்பு கவுணி, முருங்கைக்கீரை என 12 வகைகளில் தயாரிப்பு: தீபாவளி பரிசு பெட்டகத்தில் இடம்பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி, நவ. 2: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி கடலைமிட்டாய் பரிசுப் பெட்டகங்களுக்கு இந்த ஆண்டு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்களில் பாரம்பரியமான, ஆரோக்கியமான இனிப்பான கடலைமிட்டாயைச் சேர்க்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், கோவில்பட்டியில் கடலைமிட்டாய் தயாரிப்பு மற்றும் பரிசுப் பெட்டகங்கள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு மற்றும் கார வகைகள் முக்கிய இடம் பிடிக்கும். இந்நிலையில், வழக்கமான இனிப்பு வகைகளுக்கு மாற்றாக, பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் கடலைமிட்டாயைப் பரிசாக வழங்கும் பழக்கம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

நிலக்கடலை, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய், சுவைக்கு மட்டுமின்றி பாரம்பரிய உணவுப் பொருள் என்ற வகையிலும் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த தயாரிப்பின் மீதான கவனம் அதிகரித்ததுடன், உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும். வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வழக்கமான கடலைமிட்டாய் மட்டுமின்றி, பாதாம், முந்திரி, கருப்பு கவுணி, கடல்பாசி, முருங்கைக்கீரை, மாப்பிள்ளை சம்பா, நாட்டுச் சோளம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைச் சேர்த்து மொத்தம் 12 வகையான கடலை மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன.

இவை அழகிய பெட்டகங்களில் அடைக்கப்பட்டு, தீபாவளிப் பரிசாக வழங்குவதற்கு ஏற்ற வகையில் விற்பனைக்கு தயார் செய்யப்படுகின்றன.இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளிப் பரிசுப் பெட்டகங்களில் கோவில்பட்டி கடலைமிட்டாயைச் சேர்த்து வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனால், உற்பத்தி நிறுவனங்களில் தயாரிப்பு, பேக்கிங் மற்றும் பெட்டகங்களைத் தயார் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

*புவிசார் குறியீடுக்கு பின் வரவேற்பு அதிகரிப்பு

கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச்சங்க செயலாளர் கண்ணன் கூறியதாவது: கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்த பின்னர் அதன் மீதான வரவேற்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாதாம், முந்திரி, கருப்பு கவுணி, கடல்பாசி, முருங்கைக்கீரை, மாப்பிள்ளை சம்பா, நாட்டுச் சோளம் உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து 12 வகைகளில் கடலைமிட்டாய் தயாரித்து வருகிறோம். இந்த ஆண்டு பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்கும் தீபாவளிப் பரிசுப் பெட்டகங்களில் இவற்றை இடம்பெறச் செய்துள்ளன என்றார்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி சங்கத் தலைவர் கார்த்திக் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு வகையான கடலைமிட்டாய்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் விலை ரூ.250 முதல் ரூ.800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி துபாய், அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் மொத்தமாக ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதனால், இந்த ஆண்டு தீபாவளி கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்களுக்கும், இத்தொழிலைச் சார்ந்த தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சியையும் கூடுதல் வருமானத்தையும் அளிக்கும் பண்டிகையாக அமைந்துள்ளது என்றார்.