அரசு பஸ் மோதி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.21.19 லட்சம் இழப்பீடு: போக்குவரத்து கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
நெல்லை, ஆக. 29: நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 900 இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சாஸ்தாவிநல்லூரை சேர்ந்தவர் சித்திரைக்குமார் (41), கூலித் தொழிலாளி. கடந்த 2024 ஜனவரி 20ம் தேதி காலை 10.45 மணியளவில் இவர், நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் 5 மற்றும் 6வது பிளாட்பாரங்களுக்கு இடையே அமர்ந்திருந்தார். அப்போது இந்த இடத்தில் சென்னை அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்து திரும்பும்போது சித்திரைக்குமாரின் வலது காலில் மோதி ஏறியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 2024 பிப்.29ம் தேதி சித்திரைக்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த சித்திரைக்குமாரின் மனைவி வனிதாமதி (40), மகள் கிளாரிஷா ஜாக்குலின் (13), மகன் அஜித் (7) மற்றும் தந்தை பால்துரை (66) ஆகியோர் இழப்பீடு கோரி நெல்லை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சிறப்பு சார்பு நீதிபதி பிரெஸ்நேவ் முன்பு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்த சித்திரைக்குமாரின் குடும்பத்தினருக்கு அரசுப் போக்குவரத்து கழகம் ரூ.21 லட்சத்து 19 ஆயிரத்து 900ஐ இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இந்த தொகையை மனு தாக்கல் செய்யப்பட்ட 2024 ஜூன் மாதம் 20ம் தேதியில் இருந்து 7.5 சதவீத வட்டியுடன் 30 நாட்களுக்குள் நீதிமன்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என அரசுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகையை வனிதாமதி, அவரது 2 குழந்தைகள் மற்றும் சித்திரைக்குமாரின் தந்தை ஆகிய 4 பேருக்கும் தலா 25 சதவீதம் என்ற அடிப்படையில் பிரித்து வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.



