காலையில் ரயில் வருவதற்கு 25 நிமிடத்திற்கு முன்னதாக மூடப்படும் மூக்குப்பீறி கேட் மாணவ- மாணவியர், பொதுமக்கள் கடும் அவதி
நாசரேத், ஆக. 29: காலை நேரத்தில் ரயில் வருவதற்கு 25 நிமிடத்திற்கு முன்னதாக மூக்குப்பீறி ரயில்வே கேட் மூடப்படுவதால் மாணவ- மாணவியர், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை- திருச்செந்தூர்,திருச்செந்தூர்- நெல்லை இடையே பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தவிர சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காட்டிற்கு பழநி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் -நெல்லை இடையே உள்ளது நாசரேத் ரயில் நிலையம். இந்த நிலையம் அருகே மூக்குப்பீறி பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் சாலை வழியாக தினமும் பஸ்கள் தவிர லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவியர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் இவ்வழியாகத்தான் சென்று திரும்புகின்றனர்.
இந்த ரயில்வே கேட் தினமும் 14 முறை மூடி திறக்கப்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் ரயில் வருவதற்கு 25 நிமிடத்திற்கு முன்னதாக கேட் மூடப்படுவதால் மாணவ- மாணவியர், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதுகுறித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மூக்குப்பீறி மின்னல் ஸ்டீபன் கூறுகையில், இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஒரு முக்கியமான சாலையாகும். இச்சாலை நாசரேத்தில் இருந்து மூக்குப்பீறி 4 கம்பி வழியாக நாலுமாவடி, குரும்பூருக்கு செல்லும் குறுக்கு சாலையாகும். மூக்குப்பீறி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் பகுதியில் ஒவ்வொரு முறையும் ரயில் வருவதற்கு 15 முதல் 25 நிமிடத்திற்கு முன்னதாகவே மூடப்படுகிறது.
குறிப்பாக காலை நேரத்தில் 25 நிமிடங்கள் வரை மூடப்படுவதால் மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். பழைய சிக்னல் முறையை பயன்படுத்தாமல் புதிய நவீன சிக்னல் முறையை பயன்படுத்தி ரயில் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு கேட் மூடப்பட்டால் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மூக்குப்பீறி ரயில்வே கேட்டை ரயில் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.



