Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குளத்து நீரை சகதியுடன் எடுத்து வடிகட்டி பருகும் மக்கள்

குளத்தூர், ஜூலை 27: குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊர் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து வடிகட்டி குடிநீராக பருகும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குளத்தூர் அருகே ஓட்டப்பிடாரம் ஒன்றியத்திற்குட்பட்ட முத்துக்குமாரபுரம் கிராமம் உள்ளது. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கும் இக்கிராமத்தில் குடிநீர் தேவைகளுக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் குடிதண்ணீரை தரைத்தள தொட்டியில் தேக்கி வைத்து 2 நாட்களுக்கு ஒருமுறை என பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் தினசரி தண்ணீர் தேவைகளுக்கு ஊர் குளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து கொண்டு வந்து அதை வீட்டில் வைத்து வடிகட்டி குடிநீராக பருகி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை தண்ணீர் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

தண்ணீருக்கு வழியின்றி குளத்து நீரை சேறும் சகதியுமாக அள்ளி குடிக்கும் கிராம மக்களுக்கு வயிற்று போக்கு, காய்ச்சல் போன்ற பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முத்துக்குமாரபுரம் கிராம மக்களின் அத்தியாவசிய தேவையான சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் சீராக கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.