குளத்தூர், ஆக.28: குளத்தூர் கிழக்கு பகுதி வழியாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி வரை செல்கிறது கிழக்கு கடற்கரைச்சாலை. சுற்றுலா தyங்களுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான இச்சாலையில் விளாத்திகுளம் விலக்கு பகுதியில் இருந்து குறிஞ்சி நகர், மாணவர் விடுதி வரை சுமார் 200 மீட்டர் தொலைவிலான சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. விளாத்திகுளம், ராமேஸ்வரம், தூத்துக்குடி செல்லும் சாலை பிரிவின் மைய பகுதியில் இருந்து விலகிச்செல்லும் பல்வேறு வாகனங்கள், இவ்விடத்தை மின்னல் வேகத்தில் கடக்கின்றன. இச்சாலையின் வழியேதான் டாஸ்மாக் செல்லும் காட்டுப்பகுதி வழியும் உள்ளது. இதனால் மதுபிரியர்கள் இந்த கிழக்கு கடற்கரைச்சாலையை கடப்பதற்குள் விபத்துகளில் சிக்குவதோடு, எதிர்வரும் வாகனங்களையும் விபத்தில் சிக்க வைத்து விடுகின்றனர்.
இதனால் கடந்த மாதத்தில் மட்டுமே 200 மீட்டருக்குள் 20க்கும் மேற்பட்ட வாகன விபத்துகள், உயிரிழப்புகள், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியும் இச்சாலையின் ஓரத்தில்தான் உள்ளது. கிழக்கு கடற்கரைச்சாலை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பராமரிக்கும்போது மாணவர் விடுதி முன்பு இருந்த வேகத்தடையை பராமரிப்பு பணியின் போது அகற்றினர். பின்னர் இந்த இடத்தில் வேகத்தடை இல்லாமல் உள்ளதால் வாகனங்கள் கட்டுப்பாடின்றி வேகமாக வருவதுடன் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதனால் அரசு பள்ளிக்கு விடுதியில் இருந்து செல்லும் மாணவர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டுதான் செல்கின்றனர்.
குடியிருப்புகள், மாணவர் விடுதிகள் உள்ள ஆபத்தான இப்பகுதியில் வேகத்தடை அமைக்க இப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் தொடர்ந்து நடந்துவரும் விபத்துகளை தடுக்கும் விதமாக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் அமைக்கவும், வேகத்தடை, வேகக்கட்டுப்பாடு எச்சரிக்கை பதாகைகள், விபத்துப் பகுதி எச்சரிக்கை பதாகைகளை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.



