Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செய்துங்கநல்லூர் வாரச்சந்தை கழிவறைகள் சீரமைக்கப்படுமா?

செய்துங்கநல்லூர், ஆக. 28: செய்துங்கநல்லூர் வாரச்சந்தை கழிவறைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். ஆய்வின்போது கழிவறைகளை சீரமைத்து ஏலம் விடுமாறு வை. எம்எல்ஏ அறிவுறுத்தியிருந்த நிலையில், அவரது உத்தரவு என்னவாயிற்று என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். செய்துங்கநல்லூரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகின்றனர். சந்தை நடைபெறும் நாளில் செய்துங்கநல்லூர் பஜார் பகுதி மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும்.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வாரச்சந்தையின் ஏல காலஅவகாசம், கடந்த 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஏலத்தொகை அதிகமாக இருந்ததால் ஏலம் எடுக்க யாரும் முன்வராத நிலையில், வைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி.சரவணன் வாரச்சந்தையை ஆய்வு செய்தார். அப்போது சந்தையுடன் சமுதாய நலக்கூடங்களும் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வாரச்சந்தையை மட்டும் ஏலம் விட வேண்டும். ஏலத்தொகையை குறைவாக நிர்ணயிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சந்தையில் ஆண், பெண் இருபாலரும் பயன்படுத்தும் கழிவறைகள் குப்பைகள் மற்றும் அசுத்தம் நிறைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டிய எம்எல்ஏ, அவற்றை முதலில் சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்த பிறகே சந்தையை ஏலம் விட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், எம்எல்ஏவின் உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள், கடந்த 11ம் தேதி கழிவறைகளை சீரமைக்காமலேயே வாரச்சந்தையை மீண்டும் ஏலம் விட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏலத்தொகை, வரி உள்ளிட்ட தொகைகள் சேர்த்து ரூ.32 லட்சம் வரை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுமக்களின் அடிப்படை தேவையான கழிவறை வசதியை ஏற்படுத்தாமல், வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு அதிகாரிகள் சந்தையை ஏலம் விட்டுள்ளதாகவும், இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள், அவசர தேவைக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “வாரச்சந்தையில் உள்ள கழிவறைகளை சீரமைக்க வேண்டும் என்ற வை. எம்எல்ஏவின் உத்தரவு ஏன் பின்பற்றப்படவில்லை. அதிகாரிகள் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக சீரமைப்பு செய்து, கழிவறைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சந்தைக்கு வரும் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.