Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விளாத்திகுளம் பகுதி ஓட்டல்களில் உணவு விலை கடும் உயர்வு

விளாத்திகுளம், ஆக. 26: விளாத்திகுளத்தில் ஓட்டல்களில் உணவுகளின் விலை உயர்வால் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதிய சாப்பாடு விலை ரூ.130க்கு விற்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியாக விளாத்திகுளம் வட்டாரம் விளங்குகிறது. மழை பொய்த்தால் விவசாயம் என்பது கேள்விக்குறி ஆகிவிடும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்ட நிலையில், விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் கூலி வேலைத்தேடி நகர பகுதிக்கு இடம்பெயரத் துவங்கி உள்ளனர். இந்நிலையில் விளாத்திகுளம் பகுதியில் இயங்கும் ஓட்டல்களில் உணவுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் தினக்கூலிகள், வியாபாரிகள், வெளியூர் பயணிகள் மற்றும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஓட்டல்களில் ரூ.15 ஆக இருந்த புரோட்டா, முட்டை(அவித்தது/ஆபாயில்) ரூ.20 ஆக உயர்ந்துள்ளது. ரூ.110 ஆக இருந்த முழு சாப்பாடு (மதிய உணவு) விலை ரூ.130 ஆகி இருக்கிறது. காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகளான தோசை, இட்லி, பூரி போன்ற பிற உணவுகளின் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், உணவகத் தொழிலை நடத்துவதே தற்போது பெரும் சவாலாக மாறியுள்ளது. வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை அண்மைக் காலமாக உயர்த்தப்பட்டு வருகிறது.

இதுதவிர சமையல் எண்ணெய், காய்கறிகள், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் முட்டையின் மொத்தக் கொள்முதல் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. கட்டிட வாடகை மற்றும் ஊழியர்களின் கூலியையும் சமாளிக்க வேண்டியுள்ளது. பழைய விலையிலேயே உணவை விற்றால் நஷ்டத்தைத்தான் சந்திக்க நேரிடும். தவிர்க்க முடியாத சூழலிலேயே இந்த விலை உயர்வைச் செய்துள்ளோம், என்றனர்.

‘‘உணவகத்திற்கு செல்லவேயோசிக்கவேண்டியுள்ளது''

விளாத்திகுளத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் கூறுகையில், ஒரு நாளைக்கு ரூ.400 முதல் ரூ.500 வரைதான் சம்பாதிக்க முடிகிறது. இதில் மதிய உணவுக்கே ரூ.130 செலவழித்தால், மீதிப் பணத்தை வைத்து குடும்பத்தை எப்படி நடத்துவது?. 2 புரோட்டா, ஒரு முட்டை சாப்பிட்டாலே ரூ.60 ஆகிவிடுகிறது. வெளியூர் சென்று வேலை பார்த்தால் எந்த சேமிப்பும் செய்ய முடியவில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றப் பணிகளுக்காக விளாத்திகுளம் வருவோருக்கும் உணவகங்களே பசியாற்றும் இடம். ஆனால் பெருநகரங்களுக்கு இணையாக உணவுகளின் விலை உயர்ந்து விட்டதால் உணவகங்களுக்கு செல்லவே யோசிக்க வேண்டியுள்ளது. எனவே உணவு கட்டணங்களை முறைப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிக சிலிண்டர் விலையையும் கட்டுப்படுத்த வேண்டும், என்றனர்.