ஸ்பிக்நகர், ஆக. 28: தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகள் ரூ.200 முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். ஞானம், அறிவு, செல்வத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானை சதுர்த்தியில் களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். மேலும் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினந்தோறும் வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வர்.
இந்த ஆண்டு வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 2 அடி முதல் 10 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள், அனைத்து கலை அம்சத்துடன் தயாராகி வருகிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் சுண்ணாம்பு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதிக்காத நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள், சிலைகள் மீது வண்ணம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன.
விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறியதாவது: நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொது இடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். தண்ணீரில் எளிதாக கரையக்கூடிய சுண்ணாம்பு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்ய உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம். சிலைகளை 2, 3 நாட்கள் காய வைத்து, அதன்பிறகு சிமென்ட் பேப்பர் ஒட்டி, வர்ணம் பூசப்படுகிறது.
இதில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளன. விநாயகர் சிலைகள் செய்ய தேவையான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தி இருக்கிறோம். அதன்படி சிறிய சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே சிலை தயாரிப்பு பணிகளை தொடங்கி விட்டோம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன. சதுர்த்திக்கு 2 வாரங்களே இருப்பதால் வரும் நாட்களில் டெலிவரி கொடுக்க ஆரம்பித்து விடுவோம், என்றனர்.



