தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. கோவில்பட்டி, கயத்தாறு, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கனமழை கொட்டியது. தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் முக்கிய பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி அலுவலர்கள், லாரிகள் மூலம் மோட்டார் வைத்து உறிஞ்சி எடுத்து அகற்றினர்.
நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் பெய்த மழை காரணமாக மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. வானிலை மைய எச்சரிக்கை காரணமாக 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் நேற்று மீன்பிடிக்க செல்லவில்லை. மழை துவங்கியது முதலே உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. உப்பளங்களில் தேங்கிய உப்பை வார முடிவு செய்திருந்த நிலையில் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதுவும் முடங்கியது. மழை காரணமாக வேம்பார் முதல் திருச்செந்தூர் வரையில் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் லட்சக்கணக்கான டன் உப்பு அம்பாரமாக தேக்கி வைக்கப்பட்டு, தார்பாலின் கொண்டு பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பலத்த மழை காரணமாக தீப்பெட்டி தொழில், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பலத்த மழை எச்சரிக்கை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் விடுமுறை அளித்து கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவிட்டார். மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 933.70 மிமீ மழை பெய்துள்ள்ளது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 117.6மிமீ, காயல்பட்டினத்தில் 115 மிமீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியில் 16.6, வைகுண்டத்தில் 29, குலசேகரன்பட்டினத்தில் 62, சாத்தான்குளத்தில் 74.60, கோவில்பட்டியில் 70, கழுகுமலையில் 56, கயத்தாறு 43, கடம்பூர் 51.90, எட்டயபுரம் 42, விளாத்திகுளம் 74, காடல்குடி 17, வைப்பாறு 45, சூரங்குடி 46, ஓட்டப்பிடாரம் 38, மணியாச்சி 20, வேடநத்தம் 5, கீழ அரசரடி 11 என மாவட்டம் முழுவதும் சராசரியாக 49.14 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்துள்ள நிலையில், மின்னல் தாக்கியதில் தூத்துக்குடியில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆடு, மாடுகள் உள்ளிட்ட 6 கால்நடைகளும் பலியாகி உள்ளதாக வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து உள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. முக்கிய சாலைகளான டபிள்யூஜிசி ரோடு, பீச் ரோடு, குடியிருப்பு பகுதிகளான சாந்தி நகர், பொன்னாண்டி நகர் ஆகிய இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மற்றும் லாரிகள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டது.தேங்கிய நீரில் கொசு உற்பத்தியை தடுக்க, பிளீச்சிங் பவுடர் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வீடு இடிந்து மூதாட்டி காயம்
மழையின்போது தூத்துக்குடி ரெங்கநாதபுரம் பத்ரகாளியம்மன் கோயில் தெருவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் குடியிருந்த முத்து மனைவி சுப்புலட்சுமி(85) என்பவர் காயமடைந்தார். அவர், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.


