தூத்துக்குடி, ஆக. 18: தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் விவசாய அடையாள எண் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பட்டா வைத்துள்ள விவசாயிகள், ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், நில உடமை விவரங்களுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்களிலும் கட்டணமின்றி பதிவு செய்யலாம்.
வேளாண்மைத் துறை மூலம் நில உடமை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, வேளாண் அடுக்ககம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு தனிக்குறியீட்டு எண் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே விவசாய அடையாள எண் பெற்றுள்ளவர்கள், தங்களிடம் உள்ள அனைத்து பட்டா எண்களுக்கான நில விவரங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா என்பதை சரிபார்த்து, விடுபட்ட பட்டா விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.



