திருச்செந்தூர் முருகன் கோயில் சண்முகவிலாச மண்டபத்தில் நெல், தானியங்களை காணிக்கையாக வழங்கி நன்றி செலுத்தும் விவசாயிகள்
திருச்செந்தூர், ஆக. 18: திருச்செந்தூர் முருகன் கோயில் சண்முக விலாச நடுமண்டபத்தில் நெல் உள்ளிட்ட தானியங்களையும், காய், கனிகளையும் காணிக்கையாக வழங்கி விவசாயிகள் நன்றி செலுத்தி வழிபடுவது இன்றும் தலைமுறை, தலைமுறையாக தொடருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டுமே அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்தசஷ்டி விழா, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களுக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதேபோல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும் வழிபடுகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் முந்தைய காலங்களில் முகப்பு பகுதியான சண்முக விலாச மண்டபம் வழியாக உள்ளே செல்வர். கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தால் அநேக பக்தர்கள் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு இருந்தவாறே உள்ளே தெற்கு நோக்கி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானையை தரிசித்து விட்டு வெளியே செல்வர்.



