ஓட்டப்பிடாரம், ஆக. 18: ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக பணி மேற்பார்வையாளர் மீது போடப்பட்ட பிசிஆர் வழக்கை வாபஸ் பெற வேண்டும். புதிய போர்வெல்லில் இருந்து குடிநீர் வசதியை உடனடியான செய்து தர வேண்டுமென வலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி மேல மீனாட்சிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 10ம் தேதி மீனாட்சிபுரம் கண்மாய் பகுதியில் 420 அடிக்கு போர்வெல் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது 150 அடி ஆழம் மட்டுமே போர்வெல் போட்டுவிட்டு கான்ட்ராக்ட் ஊழியர்கள் புறப்பட்டு செல்ல முயன்றனர். தகவலறிந்த கிராம மக்கள் திரண்டு சென்று ரிக் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
டெண்டரில் உள்ளபடி 420 அடிக்கு போர்வெல் அமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக பணி மேற்பார்வையாளர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஒப்பந்தப்படி 420 அடிக்கு போர்வெல் அமைக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் ஒப்பந்ததாரருக்கும், யூனியன் அலுவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 420 அடிக்கு போர்வெல் அமைக்கப்பட்டது.



