Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாயமான கல்லூரி மாணவியை மீட்க கோரி சாத்தான்குளம் டிஎஸ்பி ஆபீஸ் முன்பு உறவினர்கள் திடீர் தர்ணா -பரபரப்பு

சாத்தான்குளம், ஜூலை 18: மாயமான கல்லூரி மாணவியை மீட்க கோரி அவரது உறவினர்கள், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு நேற்று திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாணவியை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். உடன்குடி அருகே உள்ள ஞானியார்குடியிருப்பை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவர், குடும்பத்துடன் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் சந்தியா (17), பிளஸ்2 முடித்து விட்டு சாத்தான்குளம் அடுத்துள்ள கொம்மடிக்கோட்டை கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதற்காக நடுவக்குறிச்சியில் உள்ள உறவினர் திரு நாமக்கனி வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

கடந்த 14ம் தேதி கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த திரு நாமக்கனி, ராஜலிங்கத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் ஊருக்கு விரைந்து வந்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். மாணவியின் செல்போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர் எங்கு சென்றார் என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இந்நிலையில் ராஜலிங்கம் மற்றும் உறவினர்கள், தட்டார்மடம் காவல் நிலையத்திற்கு சென்று மாணவி குறித்து கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் சரிவர பதில் தெரிவிக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நேற்று சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். மாயமான மாணவியை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். தகவலறிந்து விரைந்து வந்த பொறுப்பு இன்ஸ்பெக்டர் இசக்கித்துரை, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் மாணவி மீட்கப்படுவார் என உறுதி அளித்தார். இதையேற்று போராட்டத்தை கைவிட்டு உறவினர்கள் கலைந்து சென்றனர்.