Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கோவில்பட்டி சூசையப்பர் ஆலயத்தில் புனித குழந்தை தெரசம்மாவின் திருப்பண்ட பேழைக்கு வரவேற்பு: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவில்பட்டி, அக். 17: கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கு வருகை தந்த புனித குழந்தை தெரசம்மாவின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழைக்கு வரவேற்புடன் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரான்ஸ் நாட்டின் அலன்சான் பகுதியில் கடந்த 1873ம் ஆண்டு பிறந்தவர் குழந்தை தெரசா சிறுமலர். இவர் லிசியூவில் உள்ள கார்மேல் மடத்தில் சேர்ந்து கன்னியாஸ்திரியாக வாழ்ந்து இறை பணியாற்றினார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர், தனது 24வது வயதில் 1897ம் ஆண்டு உயிரிழந்தார். இவரது இறை நம்பிக்கை, எளிமை மற்றும் அர்ப்பணிப்பு மிக்க வாழ்வைப் போற்றும் வகையில், 1925ம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்பட்டார். மிஷனரி பணிகளின் பாதுகாவலராகவும் போற்றப்படும் இவர், 1997ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான் பாலால் திருச்சபையின் மறைவல்லுநராக அறிவிக்கப்பட்டார்.

புனித குழந்தை தெரசம்மா பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய நூல்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய நினைவுப் பொருட்கள் திருப்பண்டங்களாகப் பாதுகாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் இறைமக்களின் வழிபாட்டுக்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இதேபோல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட புனித குழந்தை தெரசம்மாவின் திருப்பண்டங்கள் அடங்கிய பேழை, கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது. இதில் புனிதரின் முழங்கால் எலும்பு துண்டு, ரத்தம், உடை, அவர் எழுதிய புத்தகம் மற்றும் உடல் திசுத் துண்டு உள்ளிட்ட திருப்பண்டங்கள் இடம்பெற்றிருந்தன. திருப்பண்ட பேழையை பங்குத்தந்தை அருள்ராஜ் பெற்றுக்கொண்டு, இறைமக்கள் வழிபாட்டிற்காக ஆலயத்தில் வைத்தார். தொடர்ந்து 153 மணி நேர ஜெபமாலை ஜெபம் நடைபெற்றது.

இதையடுத்து அருட்தந்தையர்கள் சேவியர், மரிய சுதன், அருள்ராஜ், குழந்தைராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் இறைமக்கள், புனித குழந்தை தெரசம்மாவின் திருப்பண்ட பேழையை முத்தமிட்டு வழிபட்டனர். கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து திருப்பண்ட பேழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டது. ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை அருள்ராஜ், உதவிப் பங்குத்தந்தை குழந்தைராஜ், அருட்சகோதரிகள், அசிசி இயக்கத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.