தூத்துக்குடி தனசேகரன் நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையால் கேள்விக்குறியான பாதுகாப்பு: மூட வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடி, அக். 17: தூத்துக்குடி தனசேகரன் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை மற்றும் அதனுடன் இணைந்துள்ள மதுக்கூடம் காரணமாக பொதுமக்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி தனசேகரன் நகரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு அருகே சிலர் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதால், அவ்வழியாகச் செல்லும் பள்ளி சிறுமிகள், வேலைக்குச் சென்று திரும்பும் ெபண்கள் உள்ளிட்டோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அருகிலுள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அச்சப்படுவதால் இப்பகுதியில் வியாபாரம் பாதியாக குறைந்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.
இதனருகில் 3 திருமண மண்டபங்கள் இருப்பதால் அதற்கு வரும் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாலை 6 மணிக்கு பிறகு இப்பகுதியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், இதனால் பொதுமக்கள் பகல், இரவு என இரு நேரங்களிலும் அச்சத்துடன் நடமாடுவதாகவும் தெரிவிக்கின்றனர். பொது இடங்களில் பகிரங்கமாக மது அருந்துவதால் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக தலையிட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், பொதுமக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.


