கோவில்பட்டி, செப். 17: கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டியை சேர்ந்த ஜெயமுருகன் மகன் கருணாகர பாண்டியன் (25). டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு 2வது ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கார்த்திகா, குழந்தைகளுடன் கோவில்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கருணாகர பாண்டியன் மட்டும் சிதம்பரம்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த கருணாகர பாண்டியன், பின்னர் குளிப்பதற்காக அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அக்கம்பக்கத்தினர் அவரை தேடினர். அப்போது தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கருணாகர பாண்டியன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குளிப்பதற்காக கிணற்றின் அருகே சென்றபோது கால் இடறி தவறி கிணற்றில் விழுந்து கருணாகர பாண்டியன் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


