நல்லூர், செப். 17: கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்த வேண்டுமென 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருங்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. பல்வேறு கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கருங்குளம், தாதன்குளம், சேரகுளம், ராமானுஜம்புதூர், கால்வாய்புளியங்குளம், தெற்கு காரச்சேரி, புதுக்குளம், அரசர்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையாக விளங்கும் இங்கு அவசர சிகிச்சை வசதிகள் போதிய அளவில் இல்லை என்பதே குற்றச்சாட்டாக உள்ளது. கடந்த வாரம் அவசர சிகிச்சைக்காக வந்த ஒருவருக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்பட்ட நிலையில், சுகாதார நிலையத்தில் அதற்குரிய வசதி இல்லாததால் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கழிவறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும், சிலர் தங்களது வீடுகளுக்குச் சென்று கழிவறையை பயன்படுத்திவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.மருத்துவமனையில் போதிய வசதிகள் இருந்தும் அவற்றை நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் பராமரிக்கவில்லை என்றும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து ஆக்சிஜன் உள்ளிட்ட அவசர சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கழிவறைகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்எல்ஏ உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வை. தொகுதி எம்எல்ஏ சரவணன், கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது மருத்துவமனையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எம்எல்ஏவின் உத்தரவு இதுவரை செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
6க்கு 3 மருத்துவர்கள் மட்டுமே பணியில்...
கருங்குளம் சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பகல் நேரத்தில் இருவரும், இரவு நேரத்தில் ஒரு மருத்துவர் என 3 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மற்ற மூவரும் இந்த மருத்துவமனையின் பணி செய்வதாக ஆவணங்கள் இருந்தாலும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்கு வருவோரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


