ஆறுமுகநேரி, ஆக. 17: பழையகாயலில் பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலியானார். பழையகாயல், மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜயமூர்த்தி (55). இவர், பழையகாயல் மெயின் ரோட்டில் அரிசிக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் 12.30 மணியளவில் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் பழையகாயல் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பரமன்குறிச்சி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த சந்தனகுமார் மகன் பரமசிவன் (26) மற்றும் இதே பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவனும் பைக்கில் தூத்துக்குடி நோக்கி வந்ததாக தெரிகிறது. பைக்கை பரமசிவன் ஓட்டியுள்ளார்.
பழையகாயல் ரட்சணியபுரம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக இரு பைக்குகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில் அரிசிக்கடை உரிமையாளர் விஜயமூர்த்தி சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பரமசிவன், பள்ளி சிறுவன் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் போலீசார், விஜயமூர்த்தி உடலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



