Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செய்துங்கநல்லூரில் கழிவுநீர் பால ஓட்டை சீரமைப்பு: பஞ். நிர்வாகம் நடவடிக்கை

செய்துங்கநல்லூர், ஜூலை 17: செய்துங்கநல்லூரில் தினகரன் செய்தி எதிரொலியாக கழிவுநீர் பால ஓட்டையை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சீரமைத்து உள்ளனர். கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செய்துங்கநல்லூர் ஊராட்சியில், காவல் நிலையத்தில் இருந்து பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் முக்கிய சாலையில் கழிவுநீர் ஓடைப்பாலம் அமைந்துள்ளது. சமீபத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் பெரிய அளவில் ஓட்டை விழுந்தது. இச்சாலையின் அருகிலேயே தொடக்கப்பள்ளி, ரேஷன் கடை, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளதால், தினமும் ஏராளமான பொதுமக்களும், மாணவர்களும் இவ்வழியாக சென்று வருகின்றனர்.

குறிப்பாக பள்ளி வேன்கள் செல்லும் நேரங்களில் எதிரே வாகனங்கள் வந்தால் விலகிச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. சிறிது கவனம் சிதறினாலும் ஓட்டையில் வாகன டயர் சிக்கி விபத்து நிகழ வாய்ப்பிருந்தது. மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் அடிக்கடி இந்த ஓட்டையில் சிக்கி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து கடந்த 11ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ஓட்டை விழுந்திருந்த கழிவுநீர் சாக்கடை பாலத்தை முழுமையாக சீரமைத்துள்ளது. இதனால் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் பொதுமக்கள் தற்போது பாதுகாப்பாக இவ்வழியாகச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வந்த கழிவுநீர் பாலப்பிரச்னையை சரி செய்த ஊராட்சி நிர்வாகத்திற்கும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.