Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கழுகுமலையில் பள்ளி அருகே விபத்து: அறிவிப்பு எச்சரிக்கை பலகை மீண்டும் வைக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கழுகுமலை, ஜூலை 17: கழுகுமலை பள்ளி அருகே கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்காக அகற்றப்பட்ட விபத்து அறிவிப்பு எச்சரிக்கை பலகையை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேகத்தடையில் எச்சரிக்கை வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு சீவலப்பேரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நெல்லை மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்தன. சீவலப்பேரியில் இருந்து கயத்தாறு, கழுகுமலை, குருவிகுளம், திருவேங்கடம், சிவகாசி வழியாக ராஜபாளையம் செல்லும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டக்குழாய்கள் பதிக்கப்பட்டன.

இந்த திட்டத்தில், கழுகுமலை மேலக்கேட்டில் இருந்து தென்காசி மாவட்டம் கரட்டுமலை வரையில் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்தன. இதில் மேலக்கேட் மற்றும் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள பெரிய வளைவுக்கு அருகே அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி அருகேயும் பெரிய குழிகள் தோண்டப்பட்டன. குழாய் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. குழிகள் தோண்டப்பட்ட போது, அங்கிருந்த ஆபத்தான வளைவு என்பதை குறிக்கும் எச்சரிக்கை இரும்பு பலகை, வேகத்தடைகள் உள்ளன, பள்ளி பகுதி ஆகியவற்றை குறிக்கும் எச்சரிக்கை இரும்பு பலகைகள் எடுத்து சாலையோரம் போடப்பட்டன. மேலும் இங்கிருந்த வேகத்தடைகள் மீதிருந்த வெள்ளை வர்ணமும் அழிந்து விட்டது.

இப்பகுதியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்து ஓராண்டை கடந்த நிலையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது குற்றால சீசன் என்பதால் இவ்வழியாக வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கழுகுமலை - சங்கரன் கோவில் சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் வேகத்தடையை புதுப்பித்து வர்ணம் பூச வேண்டும். எச்சரிக்கை பலகைகளை சாலையோரம் மீண்டும் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், “கழுகுமலையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி அருகே உள்ள வேக்கத்தடைகளை சீரமைத்து வர்ணம் பூச வேண்டும். ஏனென்றால் பகல் நேரங்களில் கூட வாகனங்கள் அதிக வேகமாக வருகின்றன. இதனால் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. மேலும் குற்றால சீசன் காலம் என்பதால் சுற்றுலா வேன், கார் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. இதில் கழுகுமலையில் உள்ள ஆபத்தான திருப்பத்தில் விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எச்சரிக்கை பலகைகள் சரியான இடத்தில் வைக்க வேண்டும்.

இப்பணிகளை தற்போது நடைபெற்று வரும் சாலைப்பணிகளுடன் இணைந்து முடித்து தர வேண்டும்'' என்றனர்.