கோவில்பட்டி, அக். 16: நாலாட்டின்புத்தூரில் வெற்றித்திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. நாலாட்டின்புத்தூர் ஊராட்சியில் தெருக்கள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களின் தேவைகளைக் கேட்டறிந்து பதிவு செய்வது தொடர்பான ‘வெற்றித் திட்டம்’ ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர்கள் ஸ்டீபன் ரத்தினகுமார், முத்துக்குமார், ஊராட்சி செயலாளர்கள் ராமசாமி, சுகாதார ஊக்குநர் சாந்தி, சாலை ஆய்வாளர்கள் முரளி, தாமஸ், சுகாதார ஊக்குநர் வீரலட்சுமி, சாலை ஆய்வாளர் முனீஸ்வரி, கணினி ஆய்வாளர், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பிஎல்எப் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் ஊராட்சியில் உள்ள தெருக்கள், சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகளின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து விரிவான விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து பதிவு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், ஊராட்சி அளவிலான தேவைகளை முறையாக கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.


