தூத்துக்குடி, அக். 15: தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மாவட்டத்தின் முக்கியத் தொழிலான உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனால் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள், மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழை காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை நீடித்தால் உப்பு உற்பத்தி மேலும் பாதிக்கப்பட்டு, அதன் விலை உயர வாய்ப்புள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் 99 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை விவரம் வருமாறு: திருச்செந்தூர் -33. குலசேகரன்பட்டினம் - 22, காயல்பட்டினம் -21, வைப்பாறு - 13, சூரங்குடி - 7, சாத்தான்குளம் -3. மாவட்டத்தில் சராசரியாக 5.21 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூர் பகுதியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. மேலும் சிவன் கோயில் உள்ளே மழை நீர் புகுந்தது.
இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து மழை நீரினை வெளியேற்றும் பணியில் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.இதேபோல திருச்செந்தூர் நகரின் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியும், சில இடங்களில் குளம்போல தேங்கியும் காணப்பட்டது. இதன் காரணமாக பள்ளி செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். எனினும் கடந்த சில மாதங்களாக வாட்டி வதைத்த 2வது கோடையில் இருந்து குளிர்விக்கும் விதமாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


