Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வனத்துறை கண்காணிப்பில் 3 குட்டிகளை ஈன்ற முள்ளெலி

தூத்துக்குடி, அக். 15: தூத்துக்குடி மாவட்டத்தில் வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் முள்ளெலி, 3 குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் தொடர்ந்து வனத்துறையினர் முள்ளெலிகள் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னிந்தியாவின் வறண்ட புதர்க்காடுகள், புல்வெளிகள் மற்றும் தேரிக்காடுகளில் வாழும் அரிய பாலூட்டி இனம் முள்ளெலி. முள்ளெலிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் இரை தேடும் இயல்புடையவை. இவை ஒரு ஈற்றில் சுமார் 4-6 குட்டிகள் பிறக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டாலும், இந்த இனத்தின் இனப்பெருக்கம் குறித்த அறிவியல் தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. தாயின் வயிற்றில் வளர்ந்து உயிருடன் பிறக்கும் குட்டிகள், ஆரம்பத்தில் தாய்ப்பாலைச் சார்ந்து வளர்கின்றன.

பின்னர் பூச்சிகள், வண்டுகள், கரையான்கள், எறும்புகள், மண்புழுக்கள் போன்ற சிறிய உயிரினங்களை உணவாக உட்கொள்ளத் தொடங்குகின்றன. முள்ளெலிகள், பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயற்கைச் சூழலின் சமநிலையைப் பேண உதவுகின்றன. மேலும் அவை உணவுச் சங்கிலியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அச்சுறுத்தல் ஏற்படும்போது உடலை முள்ளுருண்டையாகச் சுருட்டித் தற்காத்துக் கொள்ளும் தனித்துவமும் இந்த முள்ளெலிக்கு உண்டு. இந்த முள்ளெலிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் வாழ்விடம், நடமாட்டம் உள்ளிட்டவற்றை அறிவதற்கு வசதியாக ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் இவற்றின் பாதுகாப்பு குறித்து வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 3 முள்ளெலிகளில் வனத்துறை சார்பில் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முள்ளெலி தேரிக்காடு பகுதியிலும், 2 முள்ளெலிகள் பேய்க்குளம் பனங்காடு பகுதியிலும் ரேடியோ டிரான்ஸ்மீட்டர்கள் பொருத்தப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் விடப்பட்டன. இதில் பேய்க்குளம் பகுதியில் விடப்பட்ட ஒரு முள்ளெலி, தற்போது 3 குட்டிகளை ஈன்று பராமரித்து வருகிறது. இதனை வனத்துறையினர் கண்டறிந்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் முள்ளெலிகளின் இனப்பெருக்கம், நடமாட்டம் மற்றும் வாழிட தேவைகள் குறித்து அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது குட்டிகள் ஈன்றுள்ள முள்ளெலியின் புகைப்படங்கள், வனத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் முள்ளெலிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.