ஆறுமுகநேரி, அக். 14: ஆறுமுகநேரி வாரச்சந்தை அருகே ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்பை தினகரன் செய்தி எதிரொலியாக அதிகாரிகள் சீரமைத்தனர். தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் ஆறுமுகநேரி வாரச்சந்தை எதிர்புறமுள்ள பழைய இரும்பு கடை முன்பு குழாய் உடைப்பு ஏற்பட்டு பல வாரங்களாக சாலையில் குடிநீர் வீணாக சென்றது. வீணாகும் குடிநீர் சாலையோரம் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. மேலும் இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மீது தேங்கிய நீரை வாகனங்கள் பீய்ச்சி அடித்து சென்றதால் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இப்பகுதியில் பழைய பொருட்கள், சாக்கு மூட்டைகள் கிடப்பதால் அதில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் நிலையும் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
இதுகுறித்து நேற்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நேற்று காலையிலேயே பணியாளர்களை கொண்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர். குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.


