Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஸ்ரீவை. வட்டாரத்தில் குளங்கள் தூர்வாரும் பணி குழு அமைத்து கண்காணிக்கப்படுமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஸ்ரீவைகுண்டம், அக். 14: ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் நடைபெறும் குளங்கள் தூர்வாரும் பணியை குழு அமைத்து கண்காணிக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் பாசன குளங்கள் அனைத்தும் சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் தூர்ந்து போய் உள்ளன. இதனை தூர்வார வேண்டும். மதகுகளை முறையாக பராமரிக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நீர்வளத் துறையினரின் அலட்சியப் போக்கால் ஆண்டுதோறும் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீர் அதிகரித்தாலும், ஒவ்வொரு ஆண்டும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான தண்ணீர் பற்றாக்குறையும் அதிகரித்தே வருகிறது. பராமரிப்பு பணிகள் அனைத்துமே கோடை காலத்தில் மேற்கொள்ளாமல் மழை காலத்தில் மேற்கொள்ளப்படுவதால் பணிகள் முடிவடைவதற்கான காலம் அதிகரிப்பதுடன் அதன் மதிப்பீட்டுத் தொகையும் அதிகரித்து செய்யும் பணியும் முறையாக நடைபெறாத நிலையே தொடருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்களில் ஆய்வு மேற்கொண்ட சரவணன் எம்எல்ஏ, ஆறுமுகமங்கலம் குளத்தில் ஜேசிபி மூலம் தூர்வாரும் பணியையும் துவங்கி வைத்தார். ஸ்ரீவைகுண்ம் அணை வடகால் பாசனம் மூலம் தண்ணீர் வரும் ஆறுமுகமங்கலம் குளம் மூலம் 2039 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இக்குளமானது விவசாயத்திற்கான முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. தற்போது சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் தூர்ந்து போயுள்ள நிலையில் இதனை தூர்வார வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், குளத்தில் தூர்வாரும் பணியை துவங்கியது விவசாயிகளை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை கோடை காலத்திலேயே முழுமையாக முடிக்க வேண்டும்.ஆனால் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கும் தருவாயில் இப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதால் பலத்த மழை பெய்யும்போது தூர்வாரப்பட்டு குளக்கரையில் குவிக்கப்படும் மண் சரிந்து வரத்து கால்வாய்களை அடைக்கும்.மேலும் டிராக்டர் மூலம் கொண்டு செல்லும்போது சாலைகள் சேறும், சகதியுமாக மாறும். பருவமழை தீவிரமடைந்தால் பாதியிலேயே தூர்வாரும் பணிகளை நிறுத்த நேரிடும். இதனால் தூர்வாருதலுக்கான முழு பலன்களும் கிடைக்காமல் போகும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.அதேபோல் முறையான கண்காணிப்பு இல்லை எனில், அள்ளப்படும் மண் அனைத்தும் செங்கல் சூளைகளுக்கும், பயன்பாடற்ற நிலங்களை சமப்படுத்தவும் கொண்டு செல்லப்படும் அபாயமும் உள்ளது.

எனவே குளங்களில் தூர்வாரும் பணியை ஆழப்படுத்தும் நோக்கத்துடனும், கரைகளை பலப்படுத்தவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்துவதற்கு விவசாயிகள், அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக குளங்களில் உள்ள கருவேல மரங்கள், நீர்ச்செடிகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்த வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பொருநை நதிநீர் மேலாண்மை சங்க தலைவர் கண்ணன் கூறுகையில், அணை மற்றும் பாசன குளங்களை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் அரை நூற்றாண்டு கால கோரிக்கை. இதனை முறைகேடுகள் இன்றி செயல்படுத்த வேண்டும்.

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் இப்பணிகள் நடைபெற்றால் எவ்வித பலனும் இன்றி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே குளங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை முறைகேடுகள் இன்றி நடைபெறுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், என்றார்.

‘‘கண்காணிப்பு குழு மீதும் நடவடிக்கை''

பாசன குளங்களை தூர்வாரும் பணி நடைபெறும்போது வருவாய்த்துறை, நீர்வளத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், விவசாய சங்கத்தினர் மற்றும் காவல்துறை அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இக்குழுவினர் தூர்வாரும் பணியை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடிவுற்ற பிறகு விதிமீறல்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் கண்காணிப்பு குழு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.