Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கச்சனாவிளை ரயில்வே கேட் மூடப்படுவதால் மக்கள் அவதி

நாசரேத், அக். 10: ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே கச்சனாவிளை ரயில்வே கேட் மூடப்படுவதால் மாணவ- மாணவியர், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நெல்லை - திருச்செந்தூர், திருச்செந்தூர் - நெல்லை இடையே பயணிகள் ரயில்கள், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ், பழநி வழியாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் இடையே உள்ளது கச்சனாவிளை ரயில் நிலையம். இந்த நிலையம் அருகே கச்சனாவிளை பகுதியில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் சாலை வழியாக தினமும் பஸ்கள், லாரிகள், வாகனங்கள் சென்று வருகின்றன.  குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் மாணவ- மாணவியர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வழியாகத்தான் சென்று திரும்புகின்றனர். ஆனால் ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பே கேட் மூடப்படுவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் மூக்குப்பீறி மின்னல் ஸ்டீபன், மாநில பயணியர் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கூறுகையில், இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள், வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை ஒரு முக்கியமான சாலையாகும். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கும், புன்னைநகர் வனதிருப்பதி கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும் இந்த வழியாக தான் சிறப்பு பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்கின்றன.

ஆனால் கச்சனாவிளை பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் ரயில் வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்னதாகவே மூடப்படுவதால் மாணவ- மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு நாசரேத்- குரும்பூர் இடையே உள்ள கச்சனாவிளை ரயில்வே கேட்டை ரயில் வருவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பாக மூட வேண்டும் என்றனர்.